அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிரான நிலையில் சிபிஎம்மிற்குள் முரண்பாடுகள் இல்லை என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிபாசு கூறியுள்ளார். அணு ஒப்பந்தம் குறித்து மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா கூறியிருந்த கருத்துக்களுக்கு விளக்கமளித்த ஜோதிபாசு இவ்வாறு தெரிவித்தார்.
அணுசக்தியை நாம் முற்றிலும் ஒதுக்கிவிட முடியாது என்று அண்மையில் புத்ததேவ் பட்டாச்சாரியா தெரிவித்த கருத்துக்களால் விமர்சனம் எழுந்தது. அமெரிக்க எதிர்ப்புக் கொள்கையில் மார்க்சிஸ்ட் கட்சி முரண்பட்ட கருத்துக்களை கொண்டுள்ளதாக விமர்சகர்கள் கூறியிருந்தனர்.
இந்நிலையில் ’’அணுசக்திக்கான தேவையுள்ளது. இளைஞர்களுக்கு வேலை தருவதாக இருந்தால் வெளிநாட்டு முதலீடுகளும் கூடத் தேவைதான். ஆனால் அது எங்கள் அணுசக்தி ஒப்பந்த எதிர்ப்புக் கொள்கையை ஒன்றும் செய்யாது’’ என்று ஜோதிபாசு கூறியுள்ளார்.
அமெரிக்காவிற்கு எதிரான நிலையில் எங்களுக்குள் வேறுபாடு இல்லை. நாங்கள் எங்கள் கொள்கைப்படி செல்கிறோம். ஏகாதிபத்தியம், மதவாதம் ஆகிய இரண்டையுமே சமமான அச்சுறுத்தல்களாகத்தான் நாங்கள் பார்க்கிறோம் என்றும் ஜோதிபாசு குறிப்பிட்டார்.