’’ராமர் இருக்கிறாரா என்பதுபற்றித் தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ள கருத்துகளுக்காக, மத்திய அரசில் உள்ள எல்லா திமுக அமைச்சர்களையும் நீக்க வேண்டும்’’ என்று பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரசுத் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைப் பாஜக வலியுறுத்தியுள்ளது.
இதுபற்றி பாஜகவின் செய்தித் தொடர்பாளர் இரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ராமர் பாலம் பற்றியும், ராமர் பற்றியும் தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ள கருத்துக்கள் மிகவும் மோசமானவை. கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கத்தக்கவை. நாட்டில் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் கருத்துக்களைக் கூறியுள்ளதற்காக கருணாநிதி மன்னிப்புக் கேட்கும்படி பிரதமரும், காங்கிரசுத் தலைவர் சோனியா காந்தியும் வலியுறுத்தவேண்டும். தவறினால் மத்திய அமைச்சரவையில் உள்ள அனைத்து தி.மு.க. அமைச்சர்களையும் பதவிநீக்கும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும் கருத்து சுதந்திரம் என்பது புனிதமான விசயங்களைப்பற்றி அவதூறாகப் பேசுவதல்ல என்றும் பிரசாத் குறிப்பிட்டார். மத்திய அரசு பற்றிப் பேசுகையில், கடந்த மூன்று ஆண்டுகளாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெரும்பான்மை இழந்து வருகிறது. அணுசக்தி ஒப்பந்த சிக்கலில் இடதுசாரிகள் எதிராக உள்ளனர். ராமர்பால விவகாரத்தில் தி.மு.க. மத்திய அரசை சிக்கலில் தள்ளியுள்ளது. எனவே மத்திய அரசிற்குப் பெரும்பான்மை இல்லை, நிலைத்தன்மை இல்லை என்றார்.