அனைவருக்கும் கல்வி வழங்கம் நோக்கத்துடன் சிறைக் கைதிகளுக்கும் பாலியல் தொழிலாளர்களுக்கும் கல்வி வழங்கும் திட்டத்தை இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும், பாலியல் தொழிலாளர்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் தனது பல்வேறு அலுவலகங்கள் மூலமாகக் கல்வி வழங்கிவரும் ஒரே உயர் கல்வி நிறுவனம் இந்திரா காந்தி தேசியத் திறந்த நிலைப் பல்கலைக் கழகமாகும்.
குறிப்பாக முசாஃபர்நகர் பகுதியில் உள்ள சிவப்பு விளக்குப் பகுதிகளையும், பாட்னா நகரத்து மத்தியச் சிறையையும் தேர்வு செய்து கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் கல்வி நிலையங்கள் இயங்காமல் இருப்பது குறித்து இணைத் துணை வேந்தர் தேவேந்திர சவுத்ரி கூறியதாவது:
செயல்படாமல் உள்ள எல்லா மையங்களிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். சமூகத்தில் கல்வியின் பயன்களை அறியாமல் உள்ள எல்லாப்பிரிவு மக்களுக்கும் அதைக் கொண்டு சேர்க்க வேண்டும்.
நாட்டில் பல்வேறுசிறைகளில் இருந்து கல்வி கற்ற கைதிகளைக் கொண்டு அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் மற்றும் சமூகக் கடமைகள் பற்றிய விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். பாலியல் தொழிலாளர்களைக் கொண்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். இத்திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தவுள்ளோம்.
இந்திராகாந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் உள்ள 160 படிப்புகளில் உலகம் முழுவதுமிருந்து 20 இலட்சம்பேர் படிக்கின்றனர். பீகாரில் மட்டும் 50 ஆயிரம்பேர் படிக்கின்றனர்.