இந்தியா மற்றும் இங்கிலாந்து இராணுவம் இணைந்து நான்குவாரம் மேற்கொள்ளவுள்ள மிக உயரத்திலான கூட்டுப் போர்ப் பயிற்சிகள் இமய மலையில் உள்ள லடாக் பகுதியில் நேற்றுத் தொடங்கியது என்று போர்ப்படை செய்தித் தொடர்பாளர் ஏ.கே. மாத்தூர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே திட்டமிட்டபடி 125 வீரர்களடங்கிய ஒரு படைப்பிரிவு இங்கிலாந்து கப்பல் படையுடன் ஒரு படைப்பிரிவு இந்தியத் துணை நிலைப் போர்ப்படை வீரர்களும் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அல் கய்டா பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முன்னோட்டமாக இப்பயிற்சி மேற்கொள்ளப்படுகிறதா என்று
சில ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளதற்கு விடையளித்த மாத்தூர், மிக அதிக உயரமுள்ள இடங்களில் பயிற்சி பெறும் நோக்கத்துடன்தான் இந்தக் கூட்டுப்பயிற்சிக்குத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
கடந்த ஆண்டு லடாக் பகுதியில் இதேபோன்ற ஒரு பயிற்சி அமெரிக்கப் படைகளுடன் மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
இப்பயிற்சிக்காக இங்கிலாந்துப் படைகள் கடந்த பத்து நாட்களுக்கு முன்பே வந்துவிட்டன.
லடாக் பகுதியில் பயிற்சியில் ஈடுபடவுள்ள இந்திய இங்கிலாந்துப் படைகள் தங்களின் உயரமான இடங்களைச் சென்றடைய ஒருவார காலமாகும்.
இங்கிலாந்துக் கப்பல்படை வீரர்கள், உண்மையிலேயே கடினமான உயரமான மலைகளில் இறங்குவார்கள்.
நான்குவாரம் நடைபெறவுள்ள பயிற்சிக்கான தயாரிப்புப் பணிகளில் இருநாட்டு வீரர்களும் நேற்றுமுதல் ஈடுபட்டு வருகின்றனர் என்று மாத்தூர் தெரிவித்துள்ளார்.
கடினமான மலைப்பகுதிகளில் 20 ஆயிரம் அடிக்கும் அதிகமான உயரமுள்ள இடங்களில் பயிற்சியில் ஈடுபடும் போது இருநாட்டு வீரர்களின் பலத்தையும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கமாகும் என்று மாத்தூர் கூறினார்.
இருநாட்டு வீரர்களிடமும் உள்ள ஆயுதங்கள் மற்றும் அவர்களின் கையாலும் திறன்களைப் புரிந்து கொள்ளவும் இப்பயிற்சி பயன்படும் என்று கூறிய மாத்தூர், இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்துவது இப்பயிற்சியின் முக்கிய அம்சமாகும் என்றார்.
லடாக் பகுதியில் நிலவும் மிகக் குறைந்த வெப்பநிலையில் இங்கிலாந்து வீரர்களின் செயல்படும் திறனையும் இப்பயிற்சி வெளிப்படுத்தும்.
சோனாமார்க்கில் உள்ள மிகஉயரமான மலைப்பகுதிகளில் போரிடப் பயிற்சியளிக்கும் பள்ளியைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் இப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இப்பயிற்சியாளர்கள் மலையேற்றம், பனிச்சறுக்கு போன்றவற்றில் வல்லுநர்களாவர்.
உலகின் மிகக் கடினமான பகுதிகளில் செயல்பட்ட தங்கள் அனுபவங்களை இந்திய வீரர்கள் பகிர்ந்து கொள்வார்கள். இதேபோல இங்கிலாந்த வீரர்களும் தங்கள் அண்மைக்கால போர் அனுபவங்களைக் கற்றுத்தருவார்கள்.
இதுபோன்ற பகுதிகளில் பயிற்சியில் ஈடுபடும்போது இருபடைகளும் ஒருவருக்கொருவர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு பயன்பெற்றுக்கொள்ள முடியும் என்றும் மாத்தூர் தெரிவித்துள்ளார்.