இந்திய - அமெரிக்க அணு ஒப்பந்தத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து எதிர்த்துவரும் நிலையில், அணு சக்தியை நாடு புறக்கணித்துவிட முடியாது என்றும், இதுபற்றி அறிவியல் அறிஞர்களும், பொருளாதார வல்லுநர்களும் விவாதித்து ஒரு முடிவெடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சாரியா கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற தொழிலதிபர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசுகையில், "நாம் வெறுமனே அணு சக்தியைப் புறக்கணித்துவிட முடியாது. அணு உலைகளின் விலையையும், அணு சக்திக்கான செலவையும் கருத்தில்கொண்டு நாம் விவாதிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் அணு ஒப்பந்தம் பற்றி புத்ததேவ் எதையும் பேசாமல் அமைதிகாத்தார்.
அணுசக்தி விடயத்தில் முன்னேற்றத்திற்கான இந்தியாவின் முயற்சிகள் தொடரும் என்று அண்மையில் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்த கருத்துக்கள்பற்றி புத்ததேவ் பேசுகையில், "அணு உலைகளின் விலை, அணுசக்தி பெறுவதற்கான செலவு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் நமக்கு சந்தேகங்கள் உள்ளன. விஞ்ஞானிகள், அறிஞர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இதுபற்றி விவாதிக்கவேண்டும். அறிவியல் அறிஞர்களின் விவாதத்திற்குப் பிறகு இதுபற்றி நாம் முடிவெடுக்கலாம்" என்று கூறினார்.
அணுசக்தி தொடர்பாக மேற்குவங்க மாநில அரசு இன்னும் முடிவெடுக்காமல் இருப்பதற்கு, அது தொடர்பாக நிலவிவரும் வேறுபட்ட கருத்துக்களே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொழில்துறையில் மாநிலம் வேகமாக வளர்ச்சியடைந்து வருவதால் வரும் காலங்களில் அதிக சக்தி தேவைப்படும் என்று கூறிய புத்ததேவ், "மாநிலத்தின் மொத்த மின்சக்தித் தேவையில் 96 விழுக்காடு அனல் மின் நிலையங்களில் இருந்து கிடைக்கிறது" என்றார்.