ராமர் பாலத்தில் அகழ்வு பணியை மேற்கொள்ள உச்ச நீதிமன்றத்தை மத்திய அரசு அணுகி உரிய உத்தரவு பெறுவோம் என்று மத்திய கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
சேது சமுத்திர கால்வாய் திட்டம் 140 ஆண்டு கால கனவு திட்டம் ஆகும். இந்த திட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 14ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை தொடர்ந்து, இந்த திட்டத்தின் கீழ் வரும் ஆதம்பாலம் (ராமர் பாலம்) பகுதியில் மட்டும் அகழ்வு பணி நிறுத்தப்பட்டு உள்ளது என்று மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
இந்த பிரச்சனை தொடர்பாக மத்திய அரசு விரைவில் உச்ச நீதிமன்றத்தை அணுகி, ஆதம்பாலம் பகுதியில் பணியை மேற்கொள்ள உரிய உத்தரவை பெறும். இந்த திட்டம் விரைவில் நிறைவேற்றி முடிக்கப்படும் என்று நம்புகிறேன் என்று டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
இந்த சமயத்தில், 'நர்மதா பச்சா அண்டோலன்' என்ற அமைப்புக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான வழக்கில் கடந்த 2000ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அரசாங்கத்தின் கொள்கை ரீதியாக முடிவு எடுத்து நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவில் மிகப்பெரிய அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றும் போது, தனிப்பட்ட சிலர் பொது நல வழக்கு தொடர்ந்து அந்த திட்டங்களை தடுத்து நிறுத்த முயற்சிப்பது தேச நலனுக்கு எதிரானது என்பதால் அதை அனுமதிக்க முடியாது என்று அப்போது உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருந்தது. இது கவனத்தில் கொள்ளத்தக்கது ஆகும் என்று மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு சுட்டிக் காட்டியுள்ளார்.