இராமர் பாலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய மனுவைத் திரும்பப் பெற்றதன் மூலம் மதவாதச் சக்திகளிடம் மத்திய அரசு சரணடைந்துவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாற்றியுள்ளது!
மனுவைத் திரும்பப் பெறுவது என்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முடிவு, மனு விவகாரம் மதவாதச் சக்திகளின் கைகளில் சிக்கிக்கொண்டதால் எடுக்கப்பட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான பிருந்தா காரத் குற்றம் சாற்றியுள்ளார்,
இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் தொடர்பான கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்ட பிருந்தா காரத் பேசுகையில், அரசு தாக்கல் செய்த மனுவில் தேவையில்லாமல் இந்துக் கடவுள் ஒருவரின் பெயர் இழுக்கப்பட்டுள்ளது. பின்னர் அது தவறு என்று தெரிந்ததும் 3 பத்திகளில் இருந்த விளக்கங்களை நீக்கி சரியான நடவடிக்கையை அரசு மேற்கொண்டது என்றார்.
இருந்தாலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மனுவைத் திரும்பப் பெற்றதன் மூலமாக நல்லதொரு திட்டத்தைச் சந்தேகத்தில் தள்ளிவிட்டது என்றும் பிருந்தா காரத் தெரிவித்தார்.