Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராமர் பாலம் : தொல்லியல் துறை மனுக்களை திரும்பப் பெற்றது அரசு!

ராமர் பாலம் : தொல்லியல் துறை மனுக்களை திரும்பப் பெற்றது அரசு!

Webdunia

, வெள்ளி, 14 செப்டம்பர் 2007 (14:32 IST)
ராமர் பாலம் தொடர்பான வழக்கில் இந்திய தொல்லியல் துறை சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு உட்பட 2 மனுக்களை மத்திய அரசு திருப்பப் பெற்றுக்கொண்டது!

சேது சமுத்திரம் திட்டத்திற்காக ராமேஸ்வரம் கடற்பகுதியில் ராமர் பாலம் என்று கருதப்படும் நிலத்திட்டுப் பகுதியை தகர்க்கக் கூடாது என்று கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தாக்கல் செய்த மனுவிற்கு விளக்கமளித்து மனு தாக்கல் செய்த தொல்லியல் துறை, அந்த நிலத் திட்டுக்கள் ராமர் பாலம்தான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், அது மட்டுமின்றி, ராமர் வாழ்ந்ததாகவோ, அதேபோல ராமாயணம் நடந்ததாகவோ கூறுவதற்கு அழுத்தமான ஆதாரங்கள் என்று ஏதுமில்லை என கூறியிருந்தது.

தொல்லியல் துறையின் இந்த விளக்கத்தை பா.ஜ.க. உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் சர்ச்சைக்குள்ளாக்கியதை அடுத்து, தொல்லியல் துறையின் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மத்திய அரசு இன்று திரும்பப்பெற மனு தாக்கல் செய்தது. அதனை ஏற்றுக்கொண்டு மனுக்களை திரும்பப் பெறுவதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் அனுமதி அளித்தார்.

சேது சமுத்திர திட்டம் தொடர்பான பிரச்சனைகளை முழுமையாக ஆராயப் போவதாகவும், அதற்கு 3 மாத அவகாசம் வேண்டும் என்றும் மத்திய அரசு சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, வழக்கு விசாரணையை 2008 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்திற்கு தள்ளிவைப்பதாக உத்தரவிட்டார்.

அதுவரை ராமர் பாலம் என்று கூறப்படும் நிலத்திட்டுப் பகுதியில் எவ்வித ஆழ்படுத்தும் பணியும் மேற்கொள்ளக்கூடாது என்று ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடரும் என்றும் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil