வறுமை கோட்டுக்கு கீழ்வாழும் 65 வயதை தாண்டிய அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க மத்திய மந்திரி சபை முடிவு செய்துள்ளது.
பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி மத்திய அமைச்சர் பிரியரஞ்சன்தாஸ் முன்சி செய்தியாளர்களிடம் கூறுகையில், தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டப்படி, இதுவரை 65 வயதை தாண்டிய ஆதரவற்ற முதியோருக்கு மட்டும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது என்றார்.
இந்நிலையில் கடந்த சுதந்திர தின உரையின் போது, வறுமைக் கோட்டுக்கு கீழ்வாழும் 65 வயதை தாண்டிய அனைத்து முதியோருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார். அதன்படி, வறுமைக் கோட்டுக்கு கீழ்வாழும் அனைத்து முதியோருக்கும் ஓய்வூதியம் வழங்க மந்திரிசபை முடிவு செய்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.
இந்திரா காந்தி பிறந்த நாளான நவம்பர் 19ஆம் தேதி இத்திட்டம் தொடங்கப்படும். தலா ரூ.400 மாத ஓய்வூதியம் வழங்கப்படும். இத்திட்டத்தால் அரசுக்கு நடப்பு நிதியாண்டு ரூ.4,300 கோடி செலவாகும் என மத்திய அமைச்சர் பிரியரஞ்சன்தாஸ் முன்சி தெரிவித்தார்.