Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விவசாயிகள் கடன் காப்பீட்டுத் திட்டம் : அரசு பரிசீலனை!

விவசாயிகள் கடன் காப்பீட்டுத் திட்டம் : அரசு பரிசீலனை!

Webdunia

, புதன், 12 செப்டம்பர் 2007 (21:08 IST)
விவசாயிகளை கடன் பிடியில் இருந்து விடுவிக்க காப்பீட்டுடன் கூடிய கடன் திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்!

பாரதிய கிசான் சங்கம், இந்திய விவசாயிகளின் கூட்டு நடவடிக்கை இயக்கம் ஆகியவற்றைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மகேந்திர சிங் திக்காயத் தலைமையில் பிரதமரை இன்று சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது அவர்களிடம் பிரதமர் இவ்வாறு கூறியதாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமரின் ஊடக ஆலோசகர் சஞ்சையா பாரு கூறினார்.

கடன் வலையில் இருந்து விவசாயிகளை நிரந்தரமாக மீட்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும், அதே நேரத்தில் இதற்கு மேலும் கடன் வலையில் அவர்களை சிக்காமல் காப்பாற்ற காப்பீட்டுடன் கூடிய விவசாய கடன் திட்டம் குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும் விவசாய தலைவர்களிடம் பிரதமர் உறுதியளித்தார் என்று சஞ்சையா பாரு கூறினார்.

விவசாயிகளின் நலனிற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முன்னுரிமை அளித்து வருவதாகவும், விவசாயிகளின் வாழ்வாதார பாதுகாப்பில் சமூக மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதில் தனது அரசு உறுதியுடன் உள்ளதெனவும் பிரதமர் கூறியுள்ளார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பின்னர் வேளாண் விளைபொருட்களுக்கு அளிக்கப்பட்டு வந்த குறைந்தபட்ச ஆதரவு விலைகள் உயர்த்தப்பட்டதையும், உலக வர்த்தக மாநாட்டில் இந்திய விவசாயிகளின் நலன்களை காப்பாற்ற அரசு கடுமையாக வாதிட்டதையும் பிரதமர் எடுத்துக் கூறியுள்ளார்.

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் கொடியேற்றி உரையாற்றிய பிரதமர், விவசாயிகளின் வாழ் நிலையை உயர்த்தவும், உணவுப் பொருள் உற்பத்தியைப் பெருக்கவும் ரூ.25,000 கோடி முதலீட்டில் அரசு சிறப்பு திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்தும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil