இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவை ஒட்டிய கடற்பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தினால் கடல் கொந்தளிப்பின் விளைவாக சுனாமி பேரலைகள் தாக்கும் அபாயம் உள்ளதென இந்தியப் பெருங்கடல் நாடுகள் அனைத்திற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!
சென்னை உட்பட தீபகற்ப இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து, சென்னை பட்டினப்பாக்கம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் அவசரமாக வெளியேற்றப்படுகின்றனர்.
சுமத்ரா தீவு கடல் பகுதியில் இன்று (இந்திய நேரப்படி 4 மணியளவில்) கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியப் பெருங்கடலில் பூமத்திய ரேகையில் இருந்து 3.84 டிகிரி தெற்கும், தீர்க்க ரேகை 102.17 டிகிரி கிழக்கும் சந்திக்கும் இடத்தில் மையம் கொண்டு தாக்கியுள்ள இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியுள்ளதென அமெரிக்க புவியியல் ஆய்வுத்துறை கூறியுள்ளது.
ஆனால் இந்த நிலநடுக்கம் 8.2 புள்ளிகளாக பதிவாகியுள்ளதென இந்தோனேஷியா கூறியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு அருகில் உள்ள பென்குலு நகரில் பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. உயிரிழப்பும், பொருளிழப்பும் அதிகம் ஏற்பட்டிருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கத்தின் தாக்கம் 8.2 புள்ளிகள் அளவிற்கு உள்ளதால் கடல் கொந்தளிப்பும், அதனால் பேரலை தாக்குதல் அபாயம் ஏற்பட்டுள்ளதென இந்தியா, மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட இந்தியப் பெருங்கடல் நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.