ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டவரை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு சி.பி.ஐ. கோரிக்கை வைத்துள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் உறவினர் கே.பி. என்கிற குமரன் பத்மநாபன் (52). தாய்லாந்து குடியுரிமை பெற்றிருந்த இவர், விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் வாங்கி அனுப்பியதாகவும், நிதி திரட்டுவதாகவும் கூறப்படுகிறது. இவருக்கு இங்கிலாந்து, ஜெர்மனி, டென்மார்க், கிரீஸ், ஆஸ்ட்ரேலியா ஆகிய நாடுகளில் வங்கிக் கணக்குகள் இருக்கிறது.
குமரன் பத்மநாபன் மீது பல்வேறு அரசியல் தலைவர்களின் படுகொலையில் தொடர்பு இருப்பதாகவும், பிரபாகரன், பொட்டு அம்மனுக்கு அடுத்து தேடப்படுவோர் பட்டியலில் இருப்பதாகவும் இலங்கை அரசு கூறிவந்தது. தாய்லாந்தில் வசித்து வரும் குமரன் பத்மநாபனை பிடித்து தங்களிடம் ஒப்படைக்குமாறும் இன்டர் போல் போலீசின் உதவியை இலங்கை அரசு நாடியது. இதனால் காவல்துறையினர் அவரை வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் கடந்த மாதம் தாய்லாந்து ரனோங் மாகாணத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த 3 பேர் துப்பாக்கிகள் மற்றும் குண்டுகள் வாங்க முயன்றபோது காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், குமரன் பத்மநாபனுக்கு உதவியாக இருந்து ஆயுதங்களை வாங்கி அவற்றை விடுதலைப்புலிகளுக்கு அனுப்பி வைப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து குமரன் பத்மநாபனை கைது செய்ய இன்டர் போல் தீவிரம் காட்டியது.
இந்நிலையில் பாங்காக் நகரில் குமரன் பத்மநாபனை நேற்று முன்தினம் இன்டர்போல் காவல்துறை சுற்றி வளைத்து கைது செய்தது. இந்த தகவலை அங்கிருந்து வெளிவரும் பாங்காக் போஸ்ட் என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது. குமரன் பத்மநாபனை தங்களிடம் ஒப்படைக்கும்படி தாய்லாந்து அரசை இலங்கை அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.
இதனிடையே, குமரன் பத்மநாபன், ராஜீவ் கொலை வழக்கில் முக்கிய தொடர்புடையவர் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் அத்தனை ஆவணங்களையும் தாய்லாந்து அரசுக்கு உடனடியாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. மேலும் அவர் மீதான வழக்கு நிலுவையில் இருப்பதையும் சுட்டிக் காட்டி இது தொடர்பான மேல் விசாரணைக்காக அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு சி.பி.ஐ. கேட்டுக் கொண்டுள்ளது.