வங்கி பணிகளை தனியார் மூலம் செய்வதை தடை செய்வது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 12ஆம் தேதி இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துகிறார்கள்.
புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்வது குறித்து முடிவு எடுக்க வாய்ப்பு, கருணை அடிப்படையில் வாரிசு பணி வழங்குவது, வங்கி பணிகளை தனியார் மூலம் செய்வதை தடை செய்வது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் 3ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்தது. அப்போது மத்திய அரசு வங்கி ஊழியர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று அறிவித்திருந்ததை அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எம்.வெங்கடாசலம் கூறியுள்ளார்.
வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக இந்தியன் வங்கிகள் சங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி 6 மாதங்கள் ஆகியும் வங்கி ஊழியர்கள் சங்கத்தினரை அழைத்து பேசவில்லை என்று பொதுச் செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
எனவே, வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு வரும் 12ஆம் தேதி இந்தியா முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் கூட்டமைப்பில் உள்ள 9 வங்கி ஊழியர்கள் சங்கங்களும் கலந்து கொள்கின்றன. இதையொட்டி 11ஆம் தேதி வங்கிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.