தமிழக- கேரள எல்லையில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக இந்திய புவியியல் துறை இயக்குனர் முரளிதரன் கூறினார்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே கடந்த 5ஆம் தேதி தமிழக-கேரள நெடுஞ்சாலையில் கல்லலா என்ற பகுதியில் 100 மீட்டர் அளவுக்கு விரிசல் ஏற்பட்டது. அதனை சுற்றியுள்ள வனப் பகுதியிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளன. இதனை இந்திய புவியியல் துறை இயக்குனர் முரளிதரன் ஆய்வு செய்தார்.
பொதுவாக மலைப்பகுதியாக இருப்பதால் மேலே மண்ணும், அதற்கு கீழே பாறையும் இருக்கும். 15 சென்டி மீட்டர் மழை பெய்தால் அடியில் உள்ள பாறைகள் வழியாக அதிகளவு நீர் சுரக்கும். இந்த பகுதியை பார்க்கும் போது நிலச்சரிவு ஏற்படக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று முரளிதரன் கூறினார்.
நிலச்சரிவு அபாயம் உள்ளதால் போக்குவரத்தை தடை செய்வது நல்லது. நிலத்தின் அடியில் நீர் அழுத்தம் அதிகமாகி வருவதால் இதுபோன்ற வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இப்போது இல்லா விட்டால் கூட இன்னும் 15 அல்லது 20 வருடங்களில் இதுபோல் நிகழலாம் என இந்திய புவியியல் துறை இயக்குனர் உறுதிபட தெரிவித்தார்.