Publish Date: Thu, 06 Sep 2007 (13:37 IST)
Updated Date: Thu, 06 Sep 2007 (13:37 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை ஆராய கூட்டு நாடாளுமன்றக் குழு அமைக்க வேண்டும் எனறு கோரி பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏற்படுத்திய அமளியால் இரு அவைகளின் நடவடிக்கைகளும் பிற்பகல் வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது!
இன்று காலை மக்களவை கூடியதும் பாஜக உறுப்பினர்கள் நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்று கோரி முழக்கமிட்டனர். கேள்வி நேரத்தை தள்ளிவைத்துவிட்டு விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், அவர்களின் கோரிக்கையை ஏற்க அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி மறுத்ததால், பா.ஜ.க. உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்களும், சமாஜ்வாடி உள்ளிட்ட 3ம் அணி உறுப்பினர்களும் அவையின் மையப் பகுதிக்கு வந்து முழக்கமிட்டபடி இருந்ததால் அவை நடவடிக்கைகள் ஒரு மணி நேரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது.
மீண்டும் அவை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டபடி இருந்ததால் பிற்பகல் 2 மணி வரை அவை நடவடிக்கைகளை சோம்நாத் சாட்டர்ஜி தள்ளிவைத்தார்.
அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து இன்று விவாதிக்கப்படுவதாக இருந்த மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் அவையை நடைபெறவிடாமல் முழக்கப் போரில் ஈடுபட்டு தடுத்தனர்.
நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்று அவர்கள் உருவாக்கிய முழக்க அமளியால் பிற்பகல் 2 மணி வரை அவை நடவடிக்கைகள் தள்ளிவைக்கப்பட்டது.
Webdunia
Publish Date: Thu, 06 Sep 2007 (13:37 IST)
Updated Date: Thu, 06 Sep 2007 (13:37 IST)