இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள குழு குறித்த அறிவிப்பு நாடாளுமன்றத்தில் வெளியிடப்படாதது அவையை அவமதிப்பதாகும் என்று கூறி பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏற்படுத்திய அமளியால் மக்களை நடவடிக்கைகள் பிற்பகல் 3 மணி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது!
இன்று காலை மக்களவை கூடியதும் பேச எழுந்த பாரதிய ஜனதா கட்சியின் மக்களவை துணைத் தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா, கேள்வி நேரத்தை தள்ளிவைத்துவிட்டு அணு ஒப்பந்த ஆய்வுக் குழு பற்றிய அறிவிப்பின் மீது விவாதம் நடத்த வேண்டும் என்று தான் அளித்துள்ள தள்ளிவைப்பு தீர்மானத்திற்கு அனுமதி கோரினார்.
அதனை நண்பகல் 12 மணிக்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதாகக் கூறிய அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, குழந்தைகள், மின் சக்தி திட்டங்கள் ஆகியன குறித்த முக்கிய கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவுள்ளதால் கேள்வி நேரத்தை தள்ளிவைக்க இயலாது என்று கூறினார்.
அதனை ஏற்க மறுத்த பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அணு சக்தி ஒப்பந்தம் குறித்து ஆராய நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி முழக்கமிட்டதால் அவை நடவடிக்கைகள் அரை மணி நேரத்திற்கு தள்ளிவைப்பதாக சோம்நாத் சாட்டர்ஜி அறிவித்தார்.
அதன்பிறகு அவை மீண்டும் கூடியபோது பேசிய ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் பிரபுநாத் சிங், அணு ஒப்பந்தம் பற்றி முதலில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்த அதனைத் தொடர்ந்து மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர்.
5 நிமிட நேரம் இதனை கவனித்துக் கொண்டிருந்த அவைத் தலைவர் சோம்நாத் சாட்டாஜி, அவை நடவடிக்கைகளை பிற்பகல் 3 மணி வரை தள்ளிவைப்பதாக அறிவித்தார்.