மருத்துவப் படிப்பு (எம்.பி.பி.எஸ்.) ஐந்தரை ஆண்டுதான் நடக்கிறது. அதில் எந்த மாற்றமும் செய்யவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி கூறியுள்ளார்.
எம்.பி.பி.எஸ். படிப்பு காலமாகிய நான்கரை ஆண்டு மற்றும் மருத்துவப் பயிற்சி காலமாகிய ஓராண்டு என மொத்தம் ஐந்தரை ஆண்டு காலம் என்பதில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும் கிராமப்புற மருத்துவ சேவையை வலுப்படுத்த வேண்டுமென அனைத்து தரப்பு மக்களிடம் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்தும் தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன.
இது குறித்து ஆய்வு செய்த நிபுணர் குழுவின் பரிந்துரையில், கிராமப்புறங்களில் குறைந்த பட்சம் ஓராண்டாவது மருத்துவ சேவை செய்ய வேண்டும் எனவும் அதன் பிறகே அவர்களுக்கு நிரந்தர மருத்துவ பதிவு சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.
இதன் அடிப்படையில் மருத்துவம் பயின்று மருத்துவ பயிற்சி முடித்த மாணவர்கள் கிராமப்புறங்களில் குறைந்தபட்சம் ஓராண்டாவது மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்ற சட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது என்று அன்புமணி விளக்கம் அளித்துள்ளார்.
இந்த சேவையை செய்வதுடன் பொது மக்களிடம் மருத்துவர்களுக்கு மேலும் அதிகமாக நற்பெயரும், பாராட்டும் கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.