நமது நாட்டில் அணு மின் சக்தி தேவைக்காக மற்ற நாடுகளில் இருந்து அணு மின் உலைகளை இறக்குமதி செய்வதற்கு அணு சக்தி தொழில்நுட்ப விற்பனைக் குழு (என்.எஸ்.ஜி.) எந்த நிபந்தனையும் விதிக்க முடியாது என்று அணு சக்தி ஆணையத்தின் தலைவர் அனில் ககோட்கர் கூறியுள்ளார்!
சென்னை கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு சக்தி ஆராய்ச்சி மையத்தில் சிறப்பு பயிற்சி பெற்ற பொறியியல் மாணவர்களுக்கு சான்றிதழ் அளிக்கும் விழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனில் ககோட்கரிடம், இந்தியாவில் அணு மின் உலைகளுக்குத் தேவையான எரிபொருளைப் பெறுவதற்கு என்.எஸ்.ஜி. நாடுகளிடம் இந்தியாதான் பேசவேண்டும் என்று அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான சார்புச் செயலர் நிக்கோலாஸ் பர்ன்ஸ் கூறியுள்ளது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, "ஒப்பந்தப்படி, என்.எஸ்.ஜி.யுடன் நமக்காக அமெரிக்கா பேசி முடிக்க வேண்டியது அதன் கடமையாகும்" என்று பதிலளித்தார்.
நமது அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருளை பெறுவது குறித்து என்.எஸ்.ஜி. அமைப்பில் உள்ள நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அனில் ககோட்கர் கூறினார்.
இந்தியா அணு ஆயுதச் சோதனை நடத்துவதற்கு அமெரிக்க சட்டப்படி உள்ள நிபந்தனைகள் குறித்து எழுப்பப்பட்டகேள்விகளுக்கு பதிலளித்த அனில் ககோட்கர், நாம் இந்தியாவின் நலனைத்தான் கருத்தில் கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில்தான் நமது ராணுவ ரீதியான அணு சக்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறினார்.
அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளை மறு ஆக்கம் செய்து பயன்படுத்தும் உரிமை இந்தியாவிற்கு உள்ளது என்று கூறிய அனில் ககோட்கரிடம், அணு சக்தி ஒத்துழைப்பு ஏன் அவசியமாகிறது என்று கேள்வி எழுப்பியதற்கு அணு மின் சக்தி உற்பத்தியில் நாம் தன்னிறைவை நோக்கி சென்றுக் கொண்டிருந்தாலும், நமது எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு நமது அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருளைப் பெறுவதற்கான மாற்றங்களை நாடுகிறோம் என்றும் கூறினார்.
கல்பாக்கம் உள்ளிட்ட 4 இடங்களில் மேலும் 8 அணு உலைகளுக்கான அனுமதி பெறப்பட்டுள்ளது என்றும், 2050 ஆம் ஆண்டில் நமது நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 20 முதல் 25 விழுக்காடு அதாவது, 2,74,000 மெகாவாட் மின்சாரம் அணு சக்தியின் மூலம் கிடைக்கும் என்று கூறினார்.