அணு சக்தி ஒத்துழைப்பு தொடர்பாக இடதுசாரிகள் தெரிவித்து வரும் கவலைகளை புறக்கணிக்குமானால் அதற்கான விளைவை அரசு சந்திக்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி. பரதன் எச்சரித்துள்ளார்!
அமெரிக்க, ஜப்பானுடன் இணைந்து இந்திய கப்பற்படை போர் பயிற்சியில் ஈடுபடப் போவதை எதிர்த்து கொல்கட்டாவில் இருந்து விசாகப்பட்டினத்திற்குச் செல்லும் பிரச்சாரப் பயணத்தை துவக்கி வைத்துப் பேசிய ஏ.பி. பரதன், "அணு சக்தி ஒத்துழைப்பு தொடர்பாக அமைக்கப்படவுள்ள குழுவில் பங்கேற்போம். அங்கு பிரச்சனைகளை எழுப்பி விவாதிப்போம். ஆனால் நாங்கள் தெரிவிக்கும் கவலைகளை புறந்தள்ளிவிட்டு அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதற்கான விளைவை அரசு சந்திக்க வேண்டியதிருக்கும்" என்று கூறினார்.
இதேபோல, கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் பத்திரிக்கையான தேசாபிமானிக்கு அளித்துள்ள பேட்டியில், அணு சக்தி ஒத்துழைப்பு தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கையை அரசு மேற்கொண்டால் அதனை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
அணு சக்தி ஒத்துழைப்பு தொடர்பாக சர்வதேச அணு சக்தி கண்காணிப்பு முகமையுடன் எந்த பேச்சுவார்த்தையையும் அரசு நடத்தக்கூடாது. அணு சக்தி ஒத்துழைப்பிற்கு அனுமதி அளித்து அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஹென்ரி ஹைட் சட்டம் குறித்து விவாதித்து அறிக்கை அளிக்கும் வரை சர்வதேச அணு சக்தி கண்காணிப்பு முகமையை அரசு அணுகக்கூடாது என்பதே எங்களின் என்று பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.