இந்தியாவின் தொலைக்காட்சி சேவைகளை மேம்படுத்தும் அதிநவீன இன்சாட்-4சிஆர் செயற்கைக்கோள் புவி மைய சுழற்சிப் பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது!
சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்தீஷ் தாவன் விண்கல ஏவல் தளத்தில் இருந்து இன்று மாலை 6.20 மணிக்கு விண்ணில் சீறிப் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி.-எஃப்04 விண்கலம் 17 நிமிட விண் பயணத்திற்குப் பிறகு 246 கி.மீ. உயரத்தில் புவி மைய சுழற்சிப் பாதையில் இன்சாட்-4சிஆர் செயற்கைக்கோளை திட்டமிட்டபடி செலுத்தியது.
இன்று மாலை 4.21 மணிக்கு செலுத்தப்படுவதாக இருந்த ஜி.எஸ்.எல்.வி.-எஃப்04 விண்கலம், சிறிய கோளாறின் காரணமாக 110 நிமிட நேர தாமதத்திற்குப் பிறகு செலுத்தப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட பாதையில் சென்று 2 கட்டங்களைத் தாண்டி 3வது கட்டத்தில் கிரையோஜெனிக் செயல்படத் துவங்கி குறிப்பிட்ட வேகத்தை எட்டியுடன் புவி மைய சுழற்சிப் பாதையின் குறைந்தபட்ச தூரத்தில் செயற்கைக் கோளை செலுத்தியது.
விண்கலத்தில் இருந்து செயற்கைக்கோள் பிரிந்து சுழற்சிப் பாதையில் சுழலத் துவங்கியதும், கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர். வெற்றிகரமான இந்த செலுத்துதலுக்கு காரணமான இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் அதன் தலைவர் மாதவன் நாயர் பாராட்டு தெரிவித்தார்.
நாளையும், நாளை மறுநாளும் செயற்கைக்கோளில் உள்ள 440 நியூட்டன் உந்து இயந்திரம் இயக்கப்பட்டு புவி மைய சுழற்சிப் பாதையின் அதிகபட்ச தூரமான 36,000 கி.மீ. தூரத்திற்கு தள்ளப்பட்டு அங்கு புவியை நோக்கிய 71 டிகிரி கிழக்கு சாய்வில் நிலைநிறுத்தப்படும்.
இந்த செயற்கைக்கோளில் உள்ள சக்தி வாய்ந்த 12 கூ பாண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் மூலம் வீட்டிற்கு நேரடி ஒளிபரப்பு தொலைக்காட்சி வசதிகள் மேம்படுத்தப்படும்.
கடந்து ஆண்டு ஜூலையில் விண்ணில் செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. விண்கலம், சிறிது நேரத்திலேயே உந்து மோட்டார் ஒன்றின் கோளாறின் காரணமாக பாதை மாறியதால் வெடித்து சிதறிடிக்கப்பட்டது. அந்தத் தோல்வியை இன்றைய வெற்றிகரமான ஏவலின் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் துடைத்தெறிந்து சாதனை படைத்துவிட்டனர்.