குஜராத் மாநிலத்தின் அலஹாபாத் மாவட்டத்தின் பல நகரங்களில் நேற்று கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டுத் தலம் ஒன்றில் புனித நூலை அவமரியாதை செய்ததாக வந்த தகவலை அடுத்து கரேலி காவல் நிலையத்தை ஒரு கும்பல் தாக்கியது. அதன்பிறகே கலவரம் வெடித்தது.
புனித நூல் அவமரியாதை செய்யப்பட்டதாக வந்த புரளி பலப் பகுதிகளுக்கும் பரவியதால், பல பகுதிகளில் மக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
கலவரத்தில் ஈடுபட்ட மக்கள் மீது காவல்துறையினர் தடியடியும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். எனினும் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாததால் கரேலி, ஷஹகஞ், குல்தாபாத், கோட்வாலி உள்ளிட்ட சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கலவரத்தில் ஈடுபட்ட 14 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் 3 காவல் துறையினர் காயமடைந்துள்ளனர்.
கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அளிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் காவல்துறையினர் ரோந்து சுற்றி வருகின்றனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.