Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அணு சக்தி : வாய்ப்பை நழுவவிடக்கூடாது - பிரதமர்!

அணு சக்தி : வாய்ப்பை நழுவவிடக்கூடாது - பிரதமர்!

Webdunia

, வெள்ளி, 31 ஆகஸ்ட் 2007 (19:47 IST)
1971ல் நடத்திய அணு குண்டு சோதனைக்குப் பிறகு அணு சக்தி தொழில்நுட்பங்கள் நமக்குக் கிடைக்காமல் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையை மாற்றும் நல்வாய்ப்பை நழுவவிடக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்!

மராட்டிய மாநிலம் தாராப்பூரில் புதிதாக கட்டப்பட்டு இயங்கிவரும் 540 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 3வது, 4வது அணு மின் நிலையங்களை தேசத்திற்கு அர்ப்பணித்து உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், அணு சக்தி ஒப்பந்தத்தின் மூலம் தொழில்நுட்ப ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த அந்நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறினார்.

அணு சக்தி ஒத்துழைப்பு பெறுவதனால் ஏதோ ஒரு நாட்டைச் சார்ந்து நமது அணு சக்தி திட்டங்கள் தொடரப் போவதில்லை என்று கூறிய மன்மோகன் சிங், என்.எஸ்.ஜி. என்றழைக்கப்படும் அணு சக்தி தொழில்நுட்ப குழுவில் உறுப்பினர்களாக உள்ள அமெரிக்கா, ரஷ்யா, ஃபிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்தும் நமக்குத் தேவையான அணு எரிபொருளையும், அணு தொழில்நுட்பத்தையும் பெற முடியும் என்று கூறினார்.

தனது உரையில் எந்த இடத்திலும் இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு என்றோ, அது தொடர்பாக இடதுசாரிகளுடன் நேற்று நடத்திய சமரசப் பேச்சு குறித்தோ சற்றும் கோடிட்டுக் காட்டாத பிரதமர், அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்வதில் தனது அரசு பின்வாங்காது என்பதனை தெளிவுபடுத்தினார்.

"நமது நாட்டின் எதிர்கால எரிசக்தித் தேவைக்கு நாம் மேற்கொண்டு வரும் 3 கட்ட அணு சக்தித் திட்டம் மிக அவசியமானது. அதே நேரத்தில், நமது எரிசக்தித் தேவைக்காக சர்வதேச அளவில் நாம் ஏற்றுக்கொள்ளயிருக்கின்றன அணு சக்தி தொழில்நுட்பம் தொடர்பான வணிகம் எந்தவித கட்டுப்பாட்டிற்கும் உட்பட்டதல்ல" என்று கூறிய பிரதமர், நமது அணு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டம் சுதந்திரமானது, அது எல்லா விதத்திலும் பாதுகாக்கப்படும், பலப்படுத்தப்படும் என்று கூறினார்.

"நமது நாட்டில் கிடைக்கும் தோரியம் வளத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் 3 கட்ட அணு திட்டம், நமது நாட்டின் பொருளாதார தேவைகளை நிவர்த்தி செய்ய மேற்கொள்ளப்பட்ட யதார்த்த நடவடிக்கையாகும்" என்று பிரதமர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil