Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராமர் பாலம் இடிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

ராமர் பாலம் இடிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Webdunia

, வெள்ளி, 31 ஆகஸ்ட் 2007 (19:16 IST)
ராமர் பாலம் என்று கருதப்படும் பகுதியில் ஆழப்படுத்தும் பணிகள் எதையும் செப்டம்பர் 14 ஆம் தேதி வரை மேற்கொள்ள வேண்டாம் என்று மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது!

ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தொடுத்துள்ள வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பி.என். அகர்வால், பி.பி. நெளலேகர் ஆகியோர் கொண்ட நீதிமன்றக் குழு, இவ்வழக்கு தொடர்பான ராமர் பாலம் பகுதியை தவிர்த்துவிட்டு சேதும் சமுத்திரம் திட்டம் தொடர்பான ஆழப்படுத்தும் பணியை மற்ற பகுதிகளில் தொடரலாம் என்று உத்தரவிட்டது.

சேது சமுத்திரத் திட்டத்திற்காக 167 கி.மீ. தூரத்திற்கு கடல் ஆழப்படுத்தப்பட உள்ளதாகவும், அதனால் ஆதம்ஸ் பிரிட்ஜ் என்றும், இந்துகளால் ராமர் பாலம் என்று நம்பப்படும் 35 கி.மீ. நீள அமைப்பு பாதிப்பிற்கு உள்ளாகும் என்றும், தனது மனுவில் சுப்பிரமணியம் சுவாமி கூறியிருந்தார்.

சேது சமுத்திர திட்டத்திற்காக கடலை ஆழப்படுத்த வேண்டுமெனில், அதற்காக நிபுணர்கள் பரிந்துரைத்துள்ள 6 வேறு பாதைகளை அகலப்படுத்தலாம் என்றும், ராமர் பாலம் என்று நம்பப்படும் பகுதியை உடைக்கத் தேவையில்லை என்றும் சுப்பிரமணியம் சுவாமி தனது மனுவில் கூறியிருந்தார்.

மனுதாரரின் கருத்தை எதிர்த்து வாதிட்ட மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம், 2,400 கோடி செலவில் திட்டமிடப்பட்டு இதுவரை 387 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ள சேது சமுத்திரத் திட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்குச் செல்லும் கப்பல்களின் கடல் பயணத்தை ஒரு நாள் வரை குறைக்கிறது என்றும், இப்பணிக்காக ராமர் பாலம் என்று கருதப்படும் பகுதியை இடிக்கப் போவதில்லை என்ற எந்த உத்தரவாதத்தையும் அரசு இதுவரை தரவில்லை என்று கூறினார்.

மனுவை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் வாதிட்ட மத்திய அரசின் மற்றொரு கூடுதல் தலைமை வழக்கறிஞரான ஆர். மோகன், ராமர் பாலம் என்று குறிப்பிடப்படுவது உண்மையில் சுண்ணாம்புக் கற்களாலும், மணலாலும் ஆன இயற்கைத் திட்டுகள்தான் என்று கூறினார்.

அப்பொழுது குறுக்கிட்ட நீதிபதி, அப்படியானால் பல கோடி இந்துக்களின் புராண நம்பிக்கை குறித்து என்ன கூறுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

ராமர் பாலம் என்று கருதப்படும் கடல் பகுதியை ஆழப்படுத்துவதற்காக வெடி வைத்தோ அல்லது இடித்தோ அகற்றப்பட்டால், பிறகு அது தொடர்பான இவ்வழக்கில் நீதிமன்றம் கூறுவதற்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும் என்று தன் மனுவின் சார்பாக வாதிட்ட சுப்பிரமணியம் சுவாமி கூறினார்.

அதனை ஏற்ற நீதிபதிகள், ராமர் பாலம் என்று கருதப்படும் பகுதியில் எந்தவிதமான ஆழப்படுத்துதல் பணியையும் மேற்கொள்ள வேண்டாம் என்று உத்தரவிட்டது மட்டுமின்றி, சுப்பிரமணியம் சுவாமியின் மனுவிற்கு செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.

Share this Story:

Follow Webdunia tamil