Publish Date: Fri, 31 Aug 2007 (16:28 IST)
Updated Date: Fri, 31 Aug 2007 (16:27 IST)
மான் வேட்டையாடிய வழக்கில் 5 ஆண்டுக் காலம் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஹிந்தி நடிகர் சல்மான் கானை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது!
அரிய வகை கலைமான் ஒன்றை வேட்டையாடிய வழக்கில் குற்றவாளி என்று அமர்வு நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு கடந்த வாரம் சிறையில் அடைக்கப்பட்ட சல்மான் கான், வழக்கை மறு ஆய்வு செய்யுமாறும், தனக்கு பிணைய விடுதலை அளிக்குமாறும் கோரி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி, சல்மான் கானிற்கு பிணைய விடுதலை அளித்து உத்தரவிட்டார். ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமாகவும், 50,000 ரூபாய்க்கான பத்திரத்தையும் செலுத்தி பிணைய விடுதலை பெற்றுக்கொள்ளலாம் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
வரும் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி மறு ஆய்வு மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.