இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு குறித்து ஆராய நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை (Joint Parliamentary Committee) அமைக்க வேண்டும் என்ற பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று அரசு நிராகரித்துவிட்டது.
மக்களவையில் இன்று காலை கேள்வி நேரம் துவங்கியதும் ஒரு சேர பேச எழுந்த பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்தும் 123 ஒப்பந்தத்தை ஆராய நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
நீண்ட நேரம் அவர்கள் முழக்கமிட்டபடி இருந்தனர். அதற்கு பதிலளித்துப் பேசிய அயலுறவு அமைச்சரும், அவை முன்னவருமான பிரணாப் முகர்ஜி, "அரசு செய்து கொள்ளும் எந்த சர்வதேச ஒப்பந்தமும் நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டதில்லை. இதுவே 1950ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாகும். சோவியத் ஒன்றியத்துடன் 1971ஆம் ஆண்டு நட்பு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட பின்புதான் நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது" என்று கூறினார்.
எந்தவொரு அந்நிய நாட்டுடனும் மத்திய அரசு செய்து கொள்ளும் ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு கட்டுப்படுத்த அரசியல் சட்டம் இடம்கொடுக்கவில்லை என்று உரத்த குரலில் முகர்ஜி கூறினார்.
அப்போது பேச எழுந்த பாஜகவின் மக்களவை கட்சித் துணைத் தலைவர் வி.கே. மல்கோத்ரா, அணு சக்தி ஒப்பந்தம் குறித்து ஆராய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும், இடதுசாரிகளும் தனிக்குழு அமைக்க முடிவு எடுத்து அறிவித்திருப்பதும், அதுவரை அந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படாது என்று அறிவித்திருப்பதும் அவையின் உரிமையை மீறிய நடவடிக்கை என்று கூறி தான் அளித்துள்ள உரிமை மீறல் அறிக்கை மீது விவாதிக்க வேண்டும் என்று கோரினார்.
அதற்கு பதிலளித்த மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, மல்கோத்ரர் அளித்த உரிமை மீறல் தொடர்பான தாக்கீது தனது பரிசீலனையில் உள்ளது என்று கூறினார்.
அப்பொழுது பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி, அணு சக்தி ஒப்பந்தத்தை ஆராய குழு அமைப்பது என்பது அரசின் முடிவுதானேத் தவிர, ஆளும் - இடது கூட்டணியின் முடிவு அல்ல என்றும், எனவே அது உரிமை மீறல் ஆகாது என்றும் கூறினார்.
அணு சக்தி ஒப்பந்தம் குறித்தும், அது தொடர்பான அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராகவே உள்ளது என்று கூறினார்.
ஆனால், அதனை எதிர்க்கட்சிகள் ஏற்காததை அடுத்து அவையில் ஏற்பட்ட குழப்பத்தால் அவை நடவடிக்கைகள் தள்ளி வைக்கப்பட்டன.