புதுக்கோட்டை மாநிலங்களவை தொகுதி அப்படியே நீடிக்க வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறினார்.
மாநிலங்களவையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய பாஜக தேசியச் செயலாளர் சு. திருநாவுக்கரசர், புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி 1952 முதல் தனியான ஓர் நாடாளுமன்ற தொகுதியாக செயல்பட்டு வருகிறது.
எட்டு சட்டமன்றத் தொகுதி இப்பகுதியில் இருந்தும், 6 சட்டமன்றத் தொகுதிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்தும் தொகுதி சீரமைப்பில் புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி இல்லாமல் ஆக்கப்பட்டு இம்மாவட்டத்தில் எல்லா சட்டமன்ற தொகுதிகளும் 5 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு தொலைவில் உள்ள வேறு வேறு வருவாய் மாவட்டங்களோடும் தொகுதிகளோடும் இணைக்கப்பட்டுள்ளன.
இதுபோல் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிமுகமான புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி முழுவதும் பல துண்டுகளாக உடைக்கப்பட்டு, தொலைவில் உள்ள 5 வருவாய் மாவட்டங்களோடும், தொகுதிகளோடும் தூக்கி எறியப்பட்டுள்ளது. எனவே தற்போது 6 சட்டமன்றத் தொகுதிகளைப் பெற்றிருக்கும் புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்திற்கென்று நாடாளமன்றத் தொகுதி கிடையாது. இது வழிகாட்டுதலுக்கு புறம்பானது. சட்டத்திற்கு விரோதமானது. அநீதியானது. நடைமுறைக்கு விரோதமானது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பொது மக்களும், 16 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர்களும் கொதித்துப் போய் உள்ளனர். இதற்காக புதுக்கோட்டை மாவடட்ம் முழுவதும் அனுசரிக்கப்பட்ட முழு அடைப்பு வெற்றி பெற்றது. அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ளன.
எனவே, மத்திய அரசையும், தொகுதி சீரமைப்பு ஆணையத்தையும் இம்முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.