சேது சமுத்திரத் திட்டத்திற்காக "ராமர் பாலத்தை" குண்டு வைத்து தகர்க்க சதி நடக்கிறது என்று பாஜக கூறியதை அடுத்து ஆளும் கூட்டணி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசிய பாஜக உறுப்பினர் யோகி ஆதித்தனார், ராமர் கட்டிய ராமர் பாலத்தை தகர்க்கும் சதி நடக்கிறது என்று கூறினார்.
தனுஷ்கோடிக்கும், இலங்கைக்கும் இடையே உள்ள அந்த நிலத் தொடர் ராமர் கட்டியதுதான் என்று ராமாயணத்திலும், மற்ற இந்து புனித நூல்களிலும் ஆதாரம் உள்ளதாகப் பேசினார்.
அப்பொழுது குறுக்கிட்டுப் பேசிய பாஜகவின் மக்களவை துணைக் கட்சித் தலைவர் மல்கோத்ரா, சேது சமுத்திரத் திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என்றும், அதனை அரசு தகர்க்குமானால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டிவரும். அவ்வாறு செய்வது தேச நலனுக்கு தீங்கானது என்றார்.
இதற்கு, திமுக உள்ளிட்ட ஆளும் கூட்டணி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் அமளி நிலவியது.
இரு தரப்பினரையும் அவைத் தலைவர் சோம்நாத் சேட்டர்ஜி அமைதி படுத்தினார்.