இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை ஏற்கவில்லையென்றாலும், அந்தப் பிரச்சனையால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கவிழாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், மேற்கு வங்க மாநிலச் செயலருமான பீமன் பாசு கூறியுள்ளார்!
அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து வாக்கெடுப்பற்ற விவாதம் மட்டுமே நாடாளுமன்றத்தில் நடைபெறுவதால் அரசு கவிழ்வதற்கு வாய்ப்பேதும் இல்லை என்று பீமன் பாசு கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மத்தியக் குழுக் கூட்டம் நாளை டெல்லியில் துவங்குகிறது. அக்கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி புறப்படுவதற்கு முன்பு கொல்கட்டாவில் செய்தியாளர்களிடம் பேசிய பீமன் பாசு இவ்வாறு கூறியுள்ளார்.
அணு ஒப்பந்தப் பிரச்சனையால் ஆட்சி கவிழாது என்று மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஜோதி பாசு உறுதியளித்ததைத் தொடர்ந்து இன்று அக்கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
எந்த முடிவிற்கும் தயார் : சீதாராம் யச்சூரி!
இதற்கிடையே, டெல்லியில் இன்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் அணு சக்தி ஒப்பந்தம் குறித்து பேசிய பிறகு செய்தியாளர்களிடம் பேசியுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சீதாராம் யச்சூரி, அணு சக்தி ஒப்பந்தத்தின்படி, இந்திய அணு உலைகளைக் கண்காணிப்பதற்கு தனித்த திட்டம் குறித்து சர்வதேச அணு சக்தி முகமையுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தினால் அரசு கடும் சிக்கலை சந்திக்க வேண்டியதிருக்கும் என்று கூறினார்.
செப்டம்பர் 14 ஆம் தேதி சர்வதேச அணு சக்தி முகமையுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை துவக்குவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், இந்தியாவிற்கென்று தனித்த கண்காணிப்பு திட்டத்தை வடிவமைப்பது குறித்துப் பேசினால் அரசு கடும் சிக்கலை சந்திக்க வேண்டியதிருககும் என்று யச்சூரி கூறினார்.
"நாங்கள் அணு சக்தி ஒப்பந்தத்தை நிராகரிக்குமாறோ அல்லது அதன் மீது மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றோ கேட்கவில்லை. அது தொடர்பான ஆட்சேபனைகளும், சந்தேகங்களும் நீக்கப்படும் வரை தள்ளிப்போடுமாறு மட்டுமே கோருகிறோம்" என்று நாடாளுமன்ற மார்க்சிஸ்ட் கட்சித் துணைத் தலைவர் மொஹம்மது சலீம் கூறினார்.
இதற்கிடையே, ஆந்திர மாநிலம் கம்மம் நகரில் நடந்த மார்க்சிஸ்ட் கட்சியின் பேரணியில் பங்கேற்றுப் பேசிய மார்க்சிக்ஸட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், இந்த ஒப்பந்தம் அணு சக்திக்காக மட்டுமின்றி, ஏகாதிபத்திய அமெரிக்கா இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை நிர்ப்பந்தம் செய்யவும் வழிவகுக்கிறது என்று கூறியுள்ளார்.
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மேற்கொண்டு தொடரக்கூடாது என்று பிரகாஷ் காரத் பேசியுள்ளார்.