மும்பை தொடர் குண்டு வெடிப்பில் குற்றம் சாற்றப்பட்டு, சட்டத்திற்குப் புறம்பாக ஆயுதங்களை வைத்திருந்த குற்றத்திற்காக 6 ஆண்டுக்கால கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஹிந்தி திரைப்பட நடிகர் சஞ்சய் தத்திற்கு உச்ச நீதிமன்றம் தற்காலிக பிணைய விடுதலை அளித்துள்ளது!
சஞ்சய் தத்தின் பிணைய விடுதலை மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான நீதிமன்ற அமர்வு, சஞ்சய் தத்திற்கு தண்டனை விதித்து மும்பை தடா சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இதுவரை அளிக்கப்படாததால் அவரை தற்காலிகமாக பிணையில் விடுவிப்பதாக உத்தரவிட்டது.
சஞ்சய் தத்திற்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றக் குழு உத்தரவிட்டது.
தீர்ப்பு நகல் கிடைத்ததும் சஞ்சய் தத் விதிமுறைப்படி பிணைய விடுதலை கோரி மனு செய்யலாம் என்றும், அதுவரை வாரத்திற்கு ஒரு முறை தனது இல்லத்திற்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் சஞ்சய் தத் கையெழுத்திட வேண்டும் என்றும், அவருடைய கடவுச் சீட்டு சிறப்பு நீதிமன்றத்திலேயே இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
சஞ்சய் தத் மட்டுமின்றி, மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தண்டனை அளிக்கப்பட்ட மேலும் 4 பேருக்கு தற்காலிக விடுதலை அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட அஜீஸ் அகமது, சைபுனீசா அன்வர் காஜி, இப்ராஹிம் மூசா சவான் என்கின்ற பாபா, சமீர் இங்கோரா ஆகியோரும் தற்காலிக பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர்.