இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்தியுள்ள பிரகாஷ் காரத், அரசின் முடிவைப் பொறுத்து தங்களின் முடிவு அமையும் என்று கூறினார்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, அயலுறவு அமைச்சர் பிரணாப் குமார் முகர்ஜி ஆகியோரைச் சந்தித்துப் பேசியதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் காரத் இவ்வாறு கூறியுள்ளார்.
"எங்கள் நிலைப்பாட்டை பிரதமர் மன்மோகன் சிங்கிடமும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியாவிடமும் தெரிவித்துள்ளோம். அவர்கள் எடுக்கும் முடிவைத் தொடர்ந்து எங்களின் முடிவு அமையும்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்!
அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தால் நமது நாடும், காங்கிரஸ் கட்சியும் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும், அது குறித்து காங்கிரஸ்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் காரத் கூறினார்.
அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நமது அணு மின் நிலையங்களை கண்காணிப்பது குறித்து சர்வதேச அணு சக்தி கண்காணிப்பு முகமையுடன் எந்தப் பேச்சுவார்த்தைக்கும் அரசு செல்லக்கூடாது என்றும் பிரகாஷ் காரத் கூறினார்.
இது குறித்து இடதுசாரி கட்சித் தலைவர்களுடன் விரைவில் கலந்து பேசவுள்ளதாகவும் காரத் கூறினார்.