இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மன்மோகன் அரசு கைவிடாவிட்டால் ஆட்சிக்கு எதிராக கடினமான நிலைப்பாட்டை எடுப்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு நேற்று காலை டெல்லியில் கூடியது.
கட்சியின் தலைமைப் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் தலைமையிலான இக்கூட்டத்தில் அணு சக்தி ஒப்பந்தம் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்குப் பின் நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் காரத், இன்றுடன் முடியும் அரசியல் தலைமைக் குழுக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு இறுதி செய்யப்படும் என்று கூறினார்.
மன்மோகன் சிங் தலைமையிலான அரசை மார்க்சிஸ்ட் கட்சி தவிர்க்காது என்றும், ஆனால் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை பிரச்சினைகளின் அடிப்படையிலான ஆதரவாக மாற்றிக் கொள்வது என்று முடிவெடுக்கப்படலாம் என்று தெரிவித்தார்.
அணு ஒப்பந்த பிரச்சினையில் ஆட்சிக்கு எதிராக வாக்களிக்கப் போவதில்லை என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வருமான ஜோதி பாசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.