சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயி்ன் விலை அதிகரித்து வருவதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுவரும் இழப்பை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்துமாறு பெட்ரோலிய அமைச்சகத்திற்கு எண்ணெய் நிறுவனங்கள் பரிந்துரைத்துள்ளன!
கச்சா எண்ணெய் விலை உயர்வால் மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு நாள் ஒன்றிற்கு ரூ.190 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. இதனை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் விலையேற்றம் உடனடியாக இருக்காது என்றும், இன்று துவங்கியுள்ள நாடாளுமன்றக் கூட்டத் தொடர் செப்டம்பரில் முடிவுற்ற பிறகு விலை உயர்வு அறிவிப்பு வெளியாகும் என்றும் பெட்ரோலிய அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.
பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்துமாறு தாங்கள் எந்தப் பரிந்துரையையும் செய்யவில்லை என்றும், அம்முடிவை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும் என்றும் பெட்ரோலிய நிறுவன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த பிப்ரவரியில் 54-55 டாலராக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை தற்பொழுது 73 டாலர் வரை உயர்ந்துள்ளது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோலிற்கு ரூ.5.88ம், ஒரு லிட்டர் டீசலிற்கு ரூ.4.80ம், சமையல் எரிவாயு உருளை ஒன்றிற்கு ரூ.189.14ம், ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்க்கு ரூ.14.63ம் இழப்பு ஏற்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.