இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்குக் கொண்டு வரும் 123 ஒப்பந்த வரைவின் மீது வரும் 14, 16 ஆம் தேதிகளில் நாடாளுமன்றம் விவாதிக்கும் என்று அமைச்சர் தாஸ் முன்ஷி கூறியுள்ளார்!
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி, ஆகஸ்ட் 13 ஆம் தேதி (திங்கட்கிழமை) 123 ஒப்பந்த வரைவின் மீதான அரசின் நிலையை அறிக்கையாக பிரதமர் தாக்கல் செய்வார் என்றும், அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 14, 16 ஆம் தேதிகளில் விவாதம் நடைபெறும் என்றும் கூறினார்.
123 ஒப்பந்த வரைவை நிராகரிப்பதாகக் கூறியுள்ள பா.ஜ.க. தலைமையிலான தேச ஜனநாயகக் கூட்டணியும், 3வது கூட்டணியும் அவை விதி எண் 184ன் கீழ் வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்தை நடத்த வேண்டும் என்றும், 123 ஒப்பந்தத்தை எதிர்க்கும் இடதுசாரிகள் விதி எண் 193ன் கீழ் (வாக்கெடுப்பு இன்றி) விவாதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளன.