வங்கதேசத்தின் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீன் ஹைதராபாத்தில் தாக்கப்பட்டுள்ளார்!
ஆந்திரத் தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள பிரஸ் கிளப்பில் தான் எழுதிய 'ஷோத்' என்ற புத்தகத்தின் தெலுங்கு வடிவத்தை வெளியிட்டு தஸ்லிமா பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மஜ்லிஸ் ஈ இத்தாஹதுல் முஸ்லிமீன் (எம்.ஐ.எம்.) கட்சியைச் சேர்ந்த ஆந்திர மாநில சட்டப் பேரவை உறுப்பினர்கள் 3 பேரும், மற்றவர்களும் தஸ்லிமா எதிர்த்து முழக்கங்கள் எழுப்பினர்.
சிறிது நேரத்தில் செய்தியாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்த அவர்கள் தங்கள் கையில் கிடைத்ததையெல்லாம் எடுத்து தஸ்லிமா நோக்கி வீசினர். மலர்கள் வைக்கப்பட்டிருந்த ஜாடிகள், மலர்க் கொத்துக்கள் என்று அங்கிருந்த அனைத்தையும் எடுத்து தஸ்லிமா மீது வீசினர்.
கூட்டத்தில் இருந்த மற்றவர்கள் தஸ்லிமாவை பத்திரமாக காப்பாற்றினர்.
தஸ்லிமாவை தாக்க வந்த எம்.ஐ.எம். உறுப்பினர்கள் 3 பேர் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்தியக் குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ள தஸ்லிமா, இத்தாக்குதலால் தான் அரண்டுவிடவில்லை என்றும், இந்தியாவின் ஜனநாயகத்தின் மீது தனது நம்பிக்கை பலமானது என்றும் கூறினார்.
"நான் ஜனநாயகத்தை நம்புகிறேன். என் நாட்டில் ஒரு ஜனநாயகவாதியாக என்னால் பாதுகாப்பாக வாழ முடியும் என்று நம்புகிறேன். என்னைத் தாக்கியவர்கள் மிகச் சிலரே, பெரும்பான்மை மக்கள் எனக்கு ஆதரவாகவும், அனுதாபத்துடனும்தான் உள்ளனர்" என்று தஸ்லிமா நஸ் ரீன் கூறினார்.
இத்தாக்குதலில் இன்னையா நரிஷேட்டி என்ற செய்தியாளர் காயமடைந்தார்.
இச்சம்பவம் கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ள தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி, இத்தாக்குதலை வெட்கக்கேடு என்று கூறியுள்ளார்.