ஆந்திராவில் நடைபெற்று வரும் போராட்டத்தில் சமரத்திற்கு இடமில்லை என்று இடதுசாரிக் கடசித் தலைவர்கள் காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் நேரில் வலியுறுத்தியுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் பிரகாஷ் கராத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஏபி பரதன் ஆகியோர் ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் நேற்று நேரில் சந்தித்து பேசினர்.
சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையின் போது, நிலமற்ற ஏழைகளுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் வகையில் நிலச்சீர்திருத்தங்களை அமல்படுத்த ஆந்திர மாநில அரசு தவறினால் போராட்டம் தீவிரமடையும் என இடதுசாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த சந்திப்பின் போது முடிகொண்டா துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அவர்கள் சோனியா காந்தியிடம் விவாதித்தனர்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கயுள்ள நிலையில், இடது சாரி கட்சிகள் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. மத்தியில் ஆட்சியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுடனான உறவு குறித்து பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது என இடது சாரி கட்சிகள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.