உயர் கல்வி நிலையங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணாக்கர்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு செய்வதற்கு விதித்த தடையை தளர்த்துவதா என்பதை ஆகஸ்ட் 7 ஆம் தேதி முடிவு செய்து அறிவிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது!
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்விகளில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், தல்வீர் பண்டாரி ஆகியோர் கொண்ட நீதிமன்றக் குழு, இத்தடை உத்தரவு முதலில் பரிசீலிக்கப்படும் என்றும், அது தொடர்பாக அரசும், இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு தொடர்ந்த மனுதாரர்களும் ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்குள் தங்களது வாதங்களை எழுத்து மூலமாக அளிக்குமாறு உத்தரவிட்டது. (யு.என்.ஐ.)