ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி ஆஸ்ட்ரேலிய அரசு தன்னை வஞ்சித்து விட்டதாக நாடு திரும்பிய பெங்களூரு மருத்துவர் ஹனீப் தெரிவித்துள்ளார்.
ஸ்காட்லாந்து கிளாஸ்கோ விமான நிலைய தாக்குதல் தொடர்பாக பெங்களூரு மருத்துவர் ஹனீப் கடந்த 2 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டதை அடுத்து, அவர் விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலை செய்யப்பட்ட ஹனீப் நேற்றிரவு பெங்களூரு திரும்பினார். விமான நிலையத்தில் இருந்து தனது மாமனார் விட்டிற்கு சென்ற அவர், அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, விடுதலை ஆனதற்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தவறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிறையில் இருந்த போது தனது மனம் மிகுந்த மனஅழுத்தத்திற்கு ஆளானதாக அவர் தெரிவித்தார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி ஆஸ்ட்ரேலிய அரசு தன்னை வஞ்சித்து விட்டதாகவும், ஆஸ்ட்ரேலிய காவல்துறை தன்னை வைத்து நாடகம் ஆடி விட்டதாகவும் அவர் கூறினார்.
தனது குடும்பத்துடன் தற்போது சேர்ந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும், இது ஒரு உணர்ச்சிகரமான நிகழ்வு என்றும் அவர் கூறினார். தனது விடுதலைக்காக பாடுபட்ட ஆஸ்ட்ரேலியாவில் உள்ள இந்திய அயலுறவு அமைச்சகத்திற்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.