ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தில் ஏழைகளுக்கு இலவசமாக நிலம் வழங்க கோரி நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 8 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை சமர்பிக்கும்படி ஆந்திர முதலமைச்சர் ராஜ சேகர ரெட்டியை, காங்கிரஸ் தலைவர் சோனியா கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலம் வழங்க கோரி, கடந்த சில மாதங்களாக அங்குள்ள விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு நிலம் வழங்கவும், நிலச் சீர்திருத்த அமலாக்க ஆணையத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க கோரியும் நேற்று மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு இடது சாரி கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு தெலுங்கு தேசம், பாரதிய ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.
நேற்றைய கடையடைப்பு போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. கம்மம் மாவட்டத்திலுள்ள முடிகோண்டா கிராமத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியாகினர். இதனால், மாநிலத்தில் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது. கலவரம் ஏதும் நிகழாமலிருக்க அங்கு பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை சமர்பிக்கும்படி ஆந்திர முதலமைச்சர் ராஜ சேகர ரெட்டியை, காங்கிரஸ் தலைவர் சோனியா கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில், மாநில அரசைக் கண்டித்து, இன்று ஒருநாள் மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு இடதுசாரிகள் அழைப்பு விடுத்துள்ளன.