இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்கு கொண்டுவரும் 123 ஒப்பந்தத்திற்காக அணு சக்தி கொள்கை தொடர்பான எந்த உரிமையையும் இந்தியா அடமானம் வைத்துவிடவில்லை என்று தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூறினார்!
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை உறுதி செய்த 2005 ஆம் ஆண்டு ஜூலை 18 கூட்டறிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள 123 ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏராளமான பலன்களை அளிக்கவல்லது என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், அமெரிக்க அயலுறவு அமைச்சர் கோண்டலீசா ரைசும் இணைந்து விடுத்துள்ள கூட்டறிக்கையை செய்தியாளர்களிடம் வெளியிட்டுப் பேசிய தேச பாதுகாப்பு ஆலோசகர் நாரயாணன் இவ்வாறு கூறினார்.
அமெரிக்க அணு சக்தி சட்டத்தின் படி உருவாக்கப்பட்டுள்ள 123 ஒப்பந்தத்தின் முழு விவரமும் அடுத்த வார இறுதியில் வெளியிடப்படும் என்று நாராயணன் கூறினார்.
அடுத்தகட்டமாக சமூக ரீதியிலான அணு மையங்கள் என்று பட்டியலிடப்படட் அணு மின் சக்தி நிலையங்களை சர்வதேச அணு சக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவதற்கான தனித்த ஒப்பந்தம் குறித்து பேசப் போவதாகவும், அதே நேரத்தில் அணு தொழில்நுட்ப உபகரணங்களை வழங்கக்கூடிய 45 நாடுகள் கொண்ட என்.எஸ்.ஜி. அமைப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் முடிந்த பிறகு 123 ஒப்பந்தத்தை அமெரிக்க நாடாளுமன்றத்தின் இறுதி ஒப்புதலிற்காக அதிபர் புஷ் அனுப்பி வைப்பார் என்றும் அந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் எம்.கே. நாராயணனுடன் அயலுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன், அணு சக்தி ஆணையத்தின் தலைவர் அனில் ககோட்கர் ஆகியோரும் உடினிந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
123 ஒப்பந்தத்தை உருவாக்குவதற்காக நமது எந்த உரிமையையும் நாங்கள் அடகு வைத்துவிடவில்லை. நாங்கள் செய்ததெல்லாம் நமது உரிமையை அதிகப்படுத்தியதுதான் என்று கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த நாராயணன் கூறினார்.
அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை பயன்படுத்தி யுரேனியம் எரிபொருளைப் பெற்று அதன் மூலம் தனது அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை ரகசியமாகக் கூட்டிக்கொள்ள இந்தியா முயற்சிக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த நாராயணன், அப்படி எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் நாங்கள் திட்டமிட்டால் அதை எப்படி செய்துகொள்ள வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும், அதற்கு இந்த வழி தேவையில்லை என்று கூறினார்.
அணு சக்தி ஒத்துழைப்பிற்கு ஒப்புக்கொண்டுவிட்ட நிலையில், இதற்குமேல் அணு ஆயுதச் சோதனைகளை இந்தியா நடத்துமா என்று கேட்டதற்கு பதிலளித்த மூவரும், இது சமூக ரீதியிலான அணு சக்தி ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தமே என்றும், அப்படிப்பட்ட அவசியம் எழும்போது அதனை முறையாக சந்திப்போம் என்று கூறினார்.
123 ஒப்பந்தத்தை மிகச் சிறந்தது என்று தேச பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் கூற, அது திருப்திகரமானது என்று விஞ்ஞானி அனில் ககோட்கர் கூறினார்.
123 ஒப்பந்த விவரங்கள் குறித்து விளக்கத்தைக் கேட்ட இடதுசாரிகளும், பா.ஜ.க. தலைமையிலான தேச ஜனநாயகக் கூட்டணியும் மிகவும் திருப்தியடைந்ததாக நாராயணனும் மற்றவர்களும் தெரிவித்தனர்.