இந்திய மருத்துவர் முகமது ஹனீப்பிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஆஸ்ட்ரேலிய காவல் துறை திரும்பப் பெற்றுக்கொண்டுள்ள நிலையில், அவரது விசாவை மீண்டும் வழங்க வேண்டும் என ஆஸ்ட்ரேலியாவிற்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
இங்கிலாந்து கிளாஸ்கோ விமான நிலையத்தின் மீது நடந்த தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு உதவியதாக பெங்களூரு மருத்துவர் ஹனீப் கைது செய்யப்பட்டார்.
ஹனீப்பை கைது செய்வதற்காக அவரது விசாவை ஆஸ்ட்ரேலிய அரசு ரத்து செய்தது. இந்நிலையில் ஹனீப் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஆஸ்ட்ரேலிய காவல் துறை இன்று திரும்ப பெற்றுக்கொண்டது. இதையடுத்து அவர் விடுதலை ஆகுகிறார்.
இது தொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் அஹமத், ஹனீப் விடுதலை ஆவதற்கும், அவர் பத்திரமாக நாடு திரும்புவதற்கும் தேவையான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக கூறினார்.
தற்போது ஹனீப் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் திரும்ப பெற்றுக் கொண்டதால் அவரது விசாவை ஆஸ்ட்ரேலியா மீண்டும் வழக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலம் ஆஸ்ட்ரேலியா அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.