இந்தியாவின் நாடாளுமன்றம் இதுவரை சந்தித்தையெல்லாம் விட பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளது என்றும், மனித மேம்பாட்டிலும், ஆளுமையிலுமே அந்தச் சவால்கள் உள்ளதாகவும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறினார்!
நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு அளித்த வழியனுப்பு நிகழ்ச்சியில் நன்றி தெரிவித்து உரையாற்றிய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இந்தியாவை 2020 ஆம் ஆண்டிற்குள் ஒரு முன்னேறிய நாடாக மாற்றுவதற்கான திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
"21 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே மற்ற ஜனநாயக அமைப்புகளைப் போல நாடாளுமன்றமும் முன்னெப்பொழுதும் சந்தித்திராத பெரும் சவால்களை எதிர்கொண்டது. குறிப்பாக மனித மேம்பாட்டிலும், ஆளுமையிலும் அந்த சவால்கள் இருந்தன. இந்தியாவை 2020 ஆம் ஆண்டிற்குள் ஒரு முன்னேறிய நாடாக மாற்றுவதற்கு நமது நாடாளுமன்றம் அதற்கான உலகளாவிய நீண்டகால பார்வையை பெற்றிருக்க வேண்டும்" என்று கலாம் கூறினார்.
ஒரு முன்னேறிய நாடாக நமது தேசம் 2020க்குள் உருவாக வேண்டுமெனில், அதற்கான அளவீடாக தேச செழுமைக் குறியீடு உருவாக்கப்பட வேண்டும் என்றும், 2030 ஆம் ஆண்டிற்குள் நமது நாடு முழுமையான எரிசக்தி சுதந்திரத்தை பெறவேண்டும் என்றும் கலாம் கூறினார்.
நமஸ்கார் என்று கூறி தனது உரையை ஹிந்தியில் துவக்கி சிறிது நேரம் பேசிய அப்துல் கலாம், அதன்பிறகு சரளமாக ஆங்கிலத்தில் உரையாற்றினார். குடியரசு துணைத் தலைவராக தன்னோடு பணியாற்றிய பைரோன் சிங் ஷெகாவத்தை அருமையான மனிதர் என்று புகழ்ந்த கலாம், தனக்குப் பிறகு தான் வகித்துவரும் பொறுப்பை ஏற்கவுள்ள பிரதீபா பாட்லீற்கு எல்லாம் நன்றாக நடக்கட்டும் என்று வாழ்த்தியபோது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கை தட்டி பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், ஐ.கே. குஜ்ரால் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.