குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 11 மணிக்கு எண்ணப்பட்டு பிற்பகலில் முடிவு அறிவிக்கப்படுகிறது.
நாட்டின் 13 வது குடியரசுத் தலைவர் தேர்தல் நேற்று முன் தினம் நடைபெற்றது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடது சாரிகள் சார்பில் பிரதீபா பாட்டீலும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் பைரோன்சிங் ஷெகாவத்தும் போட்டியிட்டனர்.
நாடு முழுவதும் நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்குப்பதிவில் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 88 விழுக்காடும், சட்டப் பேரவை உறுப்பினர்களில் 91 விழுக்காடும் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் விமானங்கள் மூலம் நேற்று டெல்லி கொண்டு செல்லப்பட்டன.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 11 மணிக்கு எண்ணப்படுகிறது. மாலைக்குள் முடிவு தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய குடியரசுத் தலைவர் வருகிற 24 ஆம் தேதி பதவி ஏற்கிறார்.