மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு குற்றவாளிக்கு இன்று மரண தண்டனை வழங்கி தடா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1993 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி மும்பையில் பல பகுதிகளில் குண்டு வெடித்ததில் 257 பேர் கொல்லப்பட்டனர். 700 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை மும்பை தடா சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று 100 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது.
குற்றவாளிகளுக்கான தண்டனையை நீதிபதி கோடே படிப்படியாக வழங்கி வருகிறார். மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் இதுவரை 6 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்று முகமத் இக்பால் யூசுப் ஷைக் என்பவருக்கு மரண தண்டனை வழங்கி நீதிபதி கோடே தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் மற்றொரு குற்றவாளியான பாசிர் ஹைருல்லாவுக்கு ஆவுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இதுவரை 7 பேருக்கு மரண தண்டனையும், 15 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கதாகும்.