ஐஐஎம். ஐஐடி. போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் சட்டத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வருகிறது.
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் இயற்றபட்டதை தொடர்ந்து, இடங்களை அதிகரிக்கும் நடவடிக்கையை உயர் கல்வி நிறுவனங்கள் மேற்கொண்டன என்றும், உச்ச நீதிமன்றம் விதித்துள்ள இடைகால தடையால் இந்த நடவடிக்கைகளை கல்வி நிறுவனங்கள் இடையிலேயே நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட, பழங்குடி இன மாணவர்களுக்கான இடங்களையும் அதிகரிக்கும் அதே வேளையில், பொதுப் பிரிவு மாணவர்களுக்கான இடங்களில் எண்ணிக்கைக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது என்றும், இந்த சட்டத்தால் எந்த பிரிவு மாணவர்களுக்கும் பாதிப்பு இல்லை என்றும் மத்திய அரசு அந்த மனுவில் கூறியுள்ளது.