அசாமில் உல்பா தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய உணவுக் கழக அதிகாரி கொல்லப்பட்டார். தீவிரவாதிகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் அவர் குண்டு பாய்ந்து இறந்தார்.
அசாம் மாநிலத்தில் கடந்த ஏப்ரம் மாதம் இந்திய உணவுக் கழக அதிகாரி பி.சி. ராம் என்பவர் உல்பா தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். இதற்கிடையே, கடந்த 30 ஆம் தேதி பக்சா மாவட்டத்தில் உள்ள வயல் வெளியில் கிடந்த உடலை ராமின் உடல் என்று அவரது மகன் அடையாளம் காட்டினார்.
இந்நிலையில், கடத்தப்பட்ட ராம் உயிருடன் இருப்பதாக உல்பா தீவிரவாதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, ராமை தேடும் முயற்சியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். அசாம் மாநிலம் போர்கா பனிதங்கா என்ற கிராமத்தில் உல்பா தீவிரவாதிகள் தங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து காவல் துறையினர் அந்த பகுதியை சுற்றிவளைத்தனர்.
தீவிரவாதிகளை சரணடையுமாறு காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் தீவிரவாதிகள் காவல் துறையினர் மீது துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதானல் காவல் துறையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
இந்த சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் காவல் துறையினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பலியானவர்களில் ஒருவர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராம் என்பது தெரியவந்தது. இதனை அசாம் மாநில காவல் துறை உறுதி செய்துள்ளது.