சென்னையில் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்திற்கு தமிழக அரசுக்கு ரூ. 1,000 கோடியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி துறை சார்பாக டெல்லியில் நடந்த கூட்டத்தில், தமிழக அரசின் சார்பில், உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு, தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.
கூட்டத்திற்குப் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினேன். அப்போது, தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதை அவரது கவனத்துக்கு கொண்டு சென்றேன். இந்த திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.
இந்த திட்டத்தை தமிழகத்தில் மேலும் 29 மாவட்டங்களில் செயல்படுத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர், மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளதை சுட்டிக்காட்டினேன். அவ்வாறு நடைமுறை படுத்துவதற்கு முன்பு, மாநில அரசிடம் கலந்து ஆலோசித்த பிறகுதான் நடைமுறை படுத்தவேண்டும் என்று வற்புறுத்தினேன் என்று கூறினார்.
மேலும், மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்தபோது, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றும் வகையில், ஜப்பான் நிபுணர்கள் வந்து ஆய்வு செய்ததை எடுத்துரைத்தேன். ரூ. 950 கோடி திட்டத்தை துரிதமாக நிறைவேற்ற தேவையான நிதியை, ஜப்பான் வங்கி விரைவாக வழங்க வழி வகுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளேன் என்றார்.
சென்னை நகரின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்துக்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிவித்த ரூ.1,000 கோடியை உடனே தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என்று நிதி அமைச்சரிடம் கேட்டுக்கொண்டேன். அந்த தொகையை வழங்க தயாராக இருப்பதாக, ப.சிதம்பரம் தெரிவித்தார்.
இந்த திட்டத்தை, சென்னைக்கு அருகே உள்ள நிமிலியில் நடைமுறைபடுத்த தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு, அதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து உள்ளது. இந்த திட்டத்தை நடைமுறை படுத்துவதால், தென்சென்னை மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டைதீர்க்க முடியும் என்று ஸ்டாலின் கூறினார்.
டெல்லி சென்றிருந்த ஸ்டாலின் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்துப் பேசினார்.