இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்கு கொண்டுவர 123 ஒப்பந்தம் உருவாக்குவது தொடர்பான இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை அடுத்த மாதம் 16 ஆம் தேதி வாஷிங்டனில் நடைபெறவுள்ளது!
அணு சக்தி ஒத்துழைப்பு குறித்து அமெரிக்க நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்திவரும் இந்தியக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரும், சிங்கப்பூருக்கான இந்தியத் தூதருமான எஸ். ஜெய்சங்கர், வாஷிங்டனில் அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தின் அணு சக்தித் துறையைச் சேர்ந்த ரிச்சர்ட் ஸ்ட்ராட்ஃபோர்ட் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு இம்முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வாஷிங்டனில் அடுத்த மாதம் 2வது வாரத்தில் இந்திய-அமெரிக்க அணு சக்தி விஞ்ஞானிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெறும். அப்பொழுது 123 ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டிய விவரங்கள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும், அதனைத் தொடர்ந்து ஜூலை 16 ஆம் தேதி தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், அயலுறவுச் செயலர் சிவ்சங்கர், தூதர் ஜெய்சங்கர் ஆகியோர் கொண்ட குழு, அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஸ்டீஃபன் ஹாட்லி, அயலுறவு அமைச்சகத்தின் சார்புச் செயலர் நிக்கோலாஸ் பர்ன்ஸ் ஆகியோர் கொண்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தும். (பி.டி.ஐ.)