ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சாலை விபத்தில் டெல்லி முன்னாள் முதலமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சாஹிப் சிங் வர்மா உயிரிழந்தார்!
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து சாஹிம் சிங் வர்மாவும், அவருடைய உதவியாளர் மற்றும் மெய்க்காப்பாளர்களும் டெல்லியை நோக்கி டாட்டா சஃபாரி வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது ஷாஜாபூர் எனுமிடத்தில் எதிரில் வந்த டிரக் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் சாஹிப் சிங் வர்மாவும், அவருடைய வாகன ஓட்டியும், மெய்க்காப்பாளர் ஒருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஜெய்ப்பூரில் இருந்து 70 கி.மீ. தூரத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இந்த விபத்து நடந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சிக்கார் மாவட்டத்தில் பள்ளி ஒன்றிற்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டுவிட்டு சாஹிப் சிங் வர்மா டெல்லி திரும்புகையில் இந்த விபத்து நடந்துள்ளது.
சாஹிப் சிங் வர்மா, அவருடன் உயிரிழந்த மற்ற இருவரின் சடலங்கள் ஷாஜாபூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
1943 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி டெல்லியை அடுத்த முண்டுகா கிராமத்தில் பிறந்த சாஹிப் சிங் வர்மா, டெல்லி பல்கலைக்கு உட்பட்ட பகத்சிங் கல்லூரியின் நூலகவியலாளராக தனது வாழ்க்கையைத் துவக்கினார்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தனது சமூக வாழ்க்கையைத் துவக்கிய சாஹிப் சிங் வர்மா, 1977 ஆம் ஆண்டு ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு டெல்லி மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1983 ஆம் ஆண்டு பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற சாஹிப் சிங் வர்மா, 1989 வரை மாநகராட்சி உறுப்பினராகவே இருந்தார். 1993 ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று டெல்லி மாநில கல்வித்துறை அமைச்சரானார். பிறகு அம்மாநில முதலமைச்சராக 1995 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். (யு.என்.ஐ.)