இந்தியாவிற்கு பாகிஸ்தான் வழியாக குழாய் மூலம் சமையல் எரிவாயுவை அளிப்பது தொடர்பான வர்த்தக ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ள ஈரான், 2011 ஆம் ஆண்டு முதல் நாள் ஒன்றிற்கு 3 கோடி கன மீட்டர் எரிவாயுவை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது!
ஈரான் - இந்தியா எரிவாயு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக டெல்லி வந்துள்ள ஈரான் அரசின் பெட்ரோலிய அமைச்சரின் சிறப்பு பிரதிநிதி கானிமி ஃபாத், இந்திய பெட்ரோலிய அமைச்சக செயலர் எம்.எஸ். சீனிவாசனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையில் 2011 ஆம் ஆண்டு முதல் ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக குழாய் மூலம் 30 மில்லியன் கன மீட்டர் சமையல் எரிவாயு வழங்கப்படும் என்றும், அதன் விலை ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டிற்கு 0.6 முதல் 0.7 டாலராக இருக்கும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வணிக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் அனைத்து முக்கிய பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்பட்டு விட்டதாகவும், ஜூலை மாத இறுதியில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள அமைச்சரவை மட்ட பேச்சுவார்த்தையில் இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் என்று சீனிவாசன் கூறினார். (யு.என்.ஐ.)