குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிடும் துணை குடியரசுத் தலைவர் பைரோன்சிங் செகாவத் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக் காலம் முடிவடைவதால், புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க அடுத்த மாதம் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இடது சாரிகள் சார்பில் பிரதீபா பட்டேல் போட்டியிடுகிறார். இவர் கடந்த சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளராக துணை ஜனாதிபதி பைரோன்சிங் செகாவத் போட்டியிடுகிறார். இந்நிலையில் செகாவத் இன்று தேர்தல் அதிகாரியும் மக்களவை தலைமைப் பொது செயலாளருமான ஆச்சாரியிடம் தனது வேட்பு மனுவை அளித்தார்.
அப்போது, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பா.ஜ.க மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, ராஜ்நாத் சிங், ஜனதா தள தலைவர் சரத்யாதவ், அகாலி தள தலைவர் பிரகாஷ் சிங் பாதல், முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவை இன்னும் செகாவத்துக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்நிலையில், சிவசேனா கட்சி இன்று தனது முடிவை அறிவிக்கிறது. (யு.என்.ஐ)